மெகா கூட்டணியில் பீஹாரில் 20 தொகுதிகள் கேட்கிறது காங்

www.thagavalthalam.com
பீஹாரில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் இடையிலான கூட்டணி பேச்சில் முட்டுக்கட்டை நிலவுகிறது. வரும், ஏப்ரல் - மே மாதங்களில், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. ஆளும், பா.ஜ.,வுக்கு எதிராக, எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து, காங்கிரஸ் தலைமையில், மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சி, தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான பணிகளில், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான, சந்திரபாபு நாயுடு, தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், இந்த கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்து, பீஹார் மாநிலத்தில், லாலு பிரசாத்தின், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்., மற்றும் இதர கட்சிகள் இடையே, சமீபத்தில் பேச்சு நடந்தது. இதில், 'எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள், யாருக்கு எங்கு வெற்றி வாய்ப்பு அதிகம்' என்பது உட்பட, பல்வேறு வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மாநிலத்தில்,மொத்தமுள்ள, 40 தொகுதிகளில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் - 18, காங்., - 10, ராஷ்ட்ரீய லோக் சமதா மற்றும் இடதுசாரிகளுக்கு, தலா, நான்கு தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. இதர கட்சிகளுக்கு, மீதமுள்ள தொகுதிகளை ஒதுக்கவும் முடிவுசெய்யப்பட்டது.சமீபத்தில் நடந்த, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல்களில், காங்., வெற்றி பெற்றதை அடுத்து, மக்கள் ஆதரவு தங்களுக்கு முழுமையாக இருப்பதாக, அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் நம்புகின்றனர். இதையடுத்து, தொகுதிப் பங்கீடு விவகாரத்தில், கறாராக இருந்து, கணிசமான தொகுதிகளை பெற, அந்த கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதனால், பீஹார் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில், காங்., திடீரென முரண்டு பிடிக்க துவங்கி உள்ளது.ராஷ்ட்ரீய ஜனதா தளம் அறிவித்துள்ள தொகுதிப் பங்கீட்டில், தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், பீஹாரில், 20 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும், அந்த கட்சி தலைவர்கள் பிடிவாதம் பிடிக்கின்றனர். காங்கிரசின் இந்த திடீர் அறிவிப்பால், மெகா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.ஏற்கனவே, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், மெகா கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், பீஹாரிலும், கூட்டணி அமைக்கும் முயற்சியில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதால், எதிர்க்கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

லாலு மகனுக்கு திறமை இல்லை

தொகுதிப் பங்கீட்டில் எழுந்துள்ள கருத்து வேறுபாட்டை, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர்,லாலு பிரசாத் சுமூகமாக தீர்த்து வைப்பார்' என, மற்ற எதிர்கட்சி தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர். மாட்டு தீவன ஊழல் வழக்கில், லாலு சிறையில் இருப்பதால், தொகுதி பங்கீடு பேச்சை, அவரது இளைய மகன் தேஜஸ்வி யாதவ் கவனித்து வருகிறார். 'மூத்த தலைவர்களுடன் பேசி, தொகுதி பங்கீடு விவகாரத்தில், அவர்களை சமாதானம் செய்யும் திறமை, தேஜஸ்விக்கு இல்லை' என, மற்ற கட்சி தலைவர்கள் கருதுகின்றனர்.