நிலங்களுக்கான விதைகளை செயற்கை முறையில் உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனமான, மன்சான்டோ, இந்தியாவில், மத்திய அரசின் அனுமதியுடன், செயற்கை விதைகளை விற்பனை செய்து வருகிறது.இதனால், நிலங்கள் மலட்டுத்தன்மை அடைவதாகவும், அதில் விளையும் பொருட்களால், உடலுக்கு கேடு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.சிவப்பு கம்பளம்இந்த நிறுவனத்தை, இந்தியாவில் இருந்து வெளியேற்றும் வகையில், பல ஆண்டுகளாக, விவசாயிகளும், தன்னார்வலர்களும், உணவு பாதுகாப்பு அமைப்பினரும் போராடி வருகின்றனர்.இந்த நிலையில், நேற்று, நாடு முழுவதும், மன்சான்டோ நிறுவனத்திற்கு ஏதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டன.
சென்னை மெரீனா கடற்கரையில், பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு சார்பில், மாபெரும் பேரணி ஒன்றுநடத்தப்பட்டது.உழைப்பாளர் சிலையில் இருந்து துவங்கிய இந்த பேரணி, காந்தி சிலை அருகே நிறைவு பெற்றது. பேரணி யில், உணவு பாதுகாப்பு அமைப்பினர்,விவசாயிகள், விவசாய சங்கத்தினர், டாக்சி, ஆட்டோ ஓட்டுனர்கள்,தன்னார்வலர்கள் உள்ளிட்ட, நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பை சேர்ந்த அனந்து கூறியதாவது:பெரு நிறுவனங்களின் பேராசைக்கும், பாமர மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிரானதாக, மன்சான்டோ விளங்குகிறது.
ஆனால், மத்திய அரசு, அந்தநிறுவனத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது.விவசாயிகள், தங்கள் விதைகளை சேமித்து மீண்டும் நட்டால், அவர்கள் மீது, காப்புரிமை சட்டத்தில், இந்தநிறுவனம் வழக்கு தொடர்கிறது.இந்த நிறுவனத்துடன், பல நாட்டு அரசுகளும் ஒப்பந்தமும், கூட்டும் ஏற்படுத்தி, உழவர்களின் விதை இறையாண்மையை காவு கொடுப்பது மிகுந்த ஆபத்திற்குரியது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
நாட்டு விதைகள்காந்தி உழவர் கூட்டமைப்பை சேர்ந்த குமாரி கூறியதாவது:நம் உடல் நலத்தையும், உணவையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் அபாயகரமான பொருட்களை, மன்சான்டோவிற்பனை செய்கிறது. அந்த பொருட்கள் நம் சந்ததிக்கும், பெரும் கேடு விளைவிக்கும். சத்தான உணவிற்கான உரிமையை அரசு அங்கீகரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.பேரணி முடிவில், கூத்துப்பட்டறை மூலம், விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. இதை அடுத்து, விவசாயிகள், நாட்டு விதைகளை பரிமாற்றிக்கொண்டனர்.