நில அபகரிப்பு புகாரில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி





                         அண்மைக்காலமாக ஓய்ந்திருந்த நில அபகரிப்பு சிக்கலில் மீண்டும் திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினர் பெயர் அடிபடத் தொடங்கியிருக்கிறது. சென்னை போலீசில் கொடுக்கப்பட்டிருக்கும் நில அபகரிப்பு புகாரில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் சிக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

        சென்னை நுங்கம்பாக்கம் காசி கார்டன் குமரப்ப முதலில் தெருவில் 20 கிரவுண்ட் நிலம், அறக்கட்டளை ஒன்றுக்கு சொந்தமானது. இந்த அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தில் 16 கிரவுண்ட் நிலம் செல்வியின் மருமகனின் சகோதரி உமா மகேஸ்வரி பெயரில் வாங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலத்தை ரூ8 கோடிக்கு பேசியிருக்கின்றனர். அட்வான்ஸாக ரூ1 கோடியே 72 லட்சம் கொடுத்திருக்கின்றனர். பின்னர் இதில் ரூ1 கோடியே 50 லட்சத்தையும் திரும்பப் பெற்றுக் கொண்டனர். ஆக 16 கிரவுண்ட் நிலத்துக்கு கொடுக்கப்பட்ட தொகை ரூ22 லட்சம்தான். எஞ்சிய தொகையைக் கேட்டதற்கு மிரட்டினர் என்று அறக்கட்டளை நிர்வாகி யதிஸ் குப்தா போலீசில் புகார் கூறியிருக்கிறார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த இந்த பேரத்தில் எஞ்சிய தொகை தரப்படவில்லை. எந்த ஒரு நடவடிக்கையையும் போலீஸ் மேற்கொள்ளவில்லை.

          இதனால் தற்போது போலீசில் புகார் கொடுத்திருக்கிறோம் என்கிறார் எதிஸ் குப்தா. இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அறக்கட்டளை நில பேர விவகாரத்திற்காக திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தினர் யாரெல்லாம் தலையிட்டார்கள் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கருணாநிதியின் மகள் செல்விக்கு சிக்கல் வரக்கூடும் என்கிறது சென்னை மாநகர போலீஸ் வட்டாரங்கள்.