வெளிநாட்டு வங்கியில் கருப்பு பண பட்டியலை வெளியிட்டார் கெஜ்ரிவால்

   அம்பானி சகோதரர்கள் உட்பட 700 பேர் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக சமூக சேவகர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
இவர்கள் வைத்துள்ள கருப்புப் பணத்தின் மொத்த மதிப்பு 6 ஆயிரம் கோடி ரூபாய் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கருப்புப் பணம் வைத்துள்ள 700 பேரில் 150 பேரின் வீடுகளில் மட்டுமே சோதனை நடந்துள்ளதாக கூறியுள்ள கெஜ்ரிவால், மற்றவர்களின் வீடுகளில் ஏன் சோதனை நடத்தப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கருப்புப் பண பதுக்கலை மத்திய அரசு ஊக்கப்படுத்துவதாகவும் ஜெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் பெரும்பாலான கருப்புப் பணம் எச்எஸ்பிசி வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், கருப்பு பணத்தை பதுக்குவதற்கு அந்த வங்கி உதவுவதாகவும் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி ஆகியோர் மட்டும் தலா 100 கோடி ரூபாய் கருப்புப் பணத்தை வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது வீட்டில் சோதனை நடத்த வேண்டாம் என முகேஷ் அம்பானி அப்போதைய நிதி அமைச்சர் பிரணப் முகர்ஜியிடம் கேட்டுக் கொண்டதாகவும், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 500 கோடி ரூபாயை வெளிநாட்டில் பதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 80 கோடி ரூபாய் பதுக்கியுள்ளதாகவும், காங்கிரஸ் எம்.பி. அனு டாண்டன் 125 கோடி ரூபாய் பதுக்கியுள்ளதாகவும் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.