மதுவிற்பனை சீர்படுத்தப்படுமா?

மதுவிற்பனை சீர்படுத்தப்படுமா?

    மிழகத்தில் இப்போது முக்கியமான சமூக பிரச்சனையாக உருவெடுத்துள்ளது குடிப்பழக்கம். பூரண மதுவிலக்கு சாத்தியப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், கட்டுப்பாடற்ற சந்தையாக மாறியிருக்கும் மதுபான விற்பனையை சீர்படுத்த முடியாதா என்ற கேள்விக்கு பல அதிர்ச்சிகரமான பதில்களே விடைகளாக கிடைத்துள்ளன.
மதுவிற்பனை சீர்படுத்தப்படுமா?
   தமிழகத்தில் அதிகரித்து வரும் குடிப்பழக்கம், மக்களின் உடல் மற்றும் சமூக நலத்தை பாதிப்பதாக கூறி பல அமைப்புகள் பூரண மதுவிலக்கு கோரி அவ்வப்போது போராட்டங்களை நடத்திவருகின்றன. மதுக்கடையை மூடக் கோரி தினமும் மாநிலத்தின் ஏதாவது ஒரு மூலையில் பெண்களும் போராட்டம் நடத்திகொண்டிருக்கின்றனர். ஆனால், அதிர்ச்சி என்னவென்றால், ஆண்டுக்கு சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டித்தரும், இந்த மதுவை விற்பனை செய்யும் அரசுக்கு மது கொள்கையும் இல்லை, மது அடிமைகளை புனரமைக்கும் கொள்கையும் இல்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
மதுக்கொள்கை இல்லை
   உள்துறை, மதுவிலக்கு அமலாக்கத்துறை மற்றும் டாஸ்மாக் ஆகிய துறைகளிடம் புதியதலைமுறை கேட்ட கேள்விகளில் மதுக்கொள்கை இல்லை என்பது அம்பலமாகியுள்ளது.
    மது எப்படி தயாரிக்க வேண்டும், அதன் தரம், அதை கொள்முதல் செய்வது எப்படி, விற்பனை செய்யும் முறை, வாடிக்கையாளர் பாதுகாப்பு, மது அடிமை சீர்திருத்தம் ஆகியவை அடங்கியதுதான் மதுக்கொள்கை. சமீபத்தில் மகாராஸ்டிரா, கர்னாடகா அரசுகள் மதுக்கொள்கையை வெளியிட்டுள்ளன.
    மது விற்பனைக்கு சில கட்டுப்பாடுகளை கொண்டுள்ள மதுக்கொள்கை, தமிழகத்தில் இல்லாததால், குடிப்பழக்கம் வயது வித்தியாசம் இன்றி பரவி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர் மதுபான விற்பனை குறித்த ஆய்வு மேற்கொண்டுவரும் ஆய்வாளர்கள்.
மது, ஒரு தனிப்பட்ட மனிதரை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த குடும்பத்தையும் சமூகத்தையுமே அழிக்கும் சக்திவாய்ந்தது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.