காஷ்மீர் முதல் தமிழகம் வரை வாரிசு அரசியல்


காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியல் வலுப்பெறுகிறது என்ற வாதம் பலமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில், நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளில் உள்ள வாரிசு அரசியல் குறித்த சில தகவல்களை இப்போது பார்ப்போம்.
திமுகவில் வாரிசு அரசியல்: அறிஞர் அண்ணாவுக்குப் பிறகு திமுக தொண்டர்களை சிதறாமல் அரவணைத்துக் கட்சியை வளர்த்தவர் கருணாநிதி. தனது எழுத்து மற்றும் பேச்சுத் திறமையால் அந்த கட்சியின் கவர்ச்சிகரமான தலைவராக திகழும் கருணாநிதிக்குப் பிறகு திமுகவில் யார் என்ற பேச்சு அவ்வப்போது எழுந்தாலும், ஸ்டாலினை சூசகமாக முன்னிலைப்படுத்தி வந்தார் கருணாநிதி. மு.க. அழகிரி, கனிமொழி ஆகியோருக்கும் அரசியல் பொறுப்புகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், அண்மையில், நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு பேசிய கருணாநிதி, வாய்ப்பு கிடைத்தால் மு.க. ஸ்டாலினை தலைவர் பதவிக்கு முன்மொழிவேன் என்று கூறினார்.
மற்ற கட்சிகளிலும் அதே நிலை: பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸுக்குப் பின்னர் அடுத்த தலைவர் யார் என நேரடியாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அவரது அரசியல் பாதை அன்புமணிக்கு வழிவிட்டுள்ளதாகவே கருதப்படுகிறது. இதுபோல், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய ஜி.கே. மூப்பனாரின் அரசியல் வாரிசாகவே அவரது மகன் ஜி.கே. வாசன் திகழ்கிறார்.
ஆந்திரா நிலவரம்: ஆந்திரா மாநில முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டியின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பொறுப்பு வழங்கப்படலாம் என கருதப்பட்டது. ஆனால், அவ்வாறு நடைபெறாத காரணத்தால் ஜெகன் தனிக்கட்சி தொடங்கி இடைத்தேர்தலில் தனது அரசியல் பலத்தையும் நிரூபித்து இருக்கிறார். இதுபோல், தெலுங்கு தேசம் கட்சியில் என்.டி. ராமராவுக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக மருமகன் சந்திரபாபு நாயுடு தன்னை முன்னிலைப்படுத்தி ஆட்சியையும் கைப்பற்றி காட்டினார்.
முலாயம் வழியில் அகிலேஷ்: ஏழை மற்றும சாதாரண மக்களுக்கான கட்சி எனக் கூறிக் கொள்ளும் முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியிலும் வாரிசு அரசியல்தான் நிலவுகிறது. சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் முக்கியப் பங்கு வகித்தார். உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி மகத்தான வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வர் பதவியை தனது மகன் அகிலேசுக்கு வழங்கினார் முலாயம் சிங்.
மனைவியை முதல்வராக்கிய லாலு: பீகார் மாநிலத்தை தாண்டி தேசிய அரசியலிலும் அடியெடுத்து வைத்த லாலு, முதலமைச்சர் பதவியில் அரசியல் அனுபவம் இல்லாத தனது மனைவி ராப்ரி தேவியை அமர வைத்தார். மேலும், அவரது மைத்துனர் உட்பட பல உறவினர்களும் அரசியலில் களமிறக்கப்பட்டனர்.
காஷ்மீரில் மாறாத அரசியல்: காஷ்மீரைப் பொறுத்தவரை ஷேக் அப்துல்லா, பரூக் அப்துல்லாவைத் தொடர்ந்து மூன்றாவது தலைமுறை வாரிசாக தற்போது உமர் அப்துல்லா முதலமைச்சராக உள்ளார். அவரது தந்தை பரூக் அப்துல்லா தேசிய அரசியலை விரும்பியதால் மாநில அரசியலை மகனுக்கு கொடுத்துவிட்டு தேசிய அரசியலில் ஐக்கியமாகி தற்போது மத்திய அமைச்சராக உள்ளார்.
மராட்டியத்தில் தாக்கரே :சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே கடந்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து அவரது இளைய மகன் உத்தவ் தாக்கரே கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். எனினும், தனக்குப் பின் தனது வாரிசான உத்தவ் தாக்கரே கட்சியை கவனித்துக் கொள்வார் என்று பால் தாக்கரே ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்ததுடன், கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் எழுதிய கட்டுரையிலும் குறிப்பிட்டிருந்தார்.
பல கட்சிகளிலும் வாரிசு அரசியல்: ஒரிசாவில் முதலமைச்சராக இருந்த பிஜு பட்நாயக்கைத் தொடர்ந்து அவரது மகன் நவீன் பட்நாயக்கும் அம்மாநில முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட், மாதவராவ் சிந்தியா மகன் ஜோதிராதித்ய சிந்தியா, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித் ஆகியோரும் வாரிசு அரசியலுக்கு ஆதாரமாக விளங்குகின்றனர்.
எனவே, காஷ்மீர் முதல் தமிழகம் வரை வாரிசு அரசியல் என்பது ஏறத்தாழ அனைத்துக் கட்சிகளிலும் உள்ளது என்றே கூறலாம்.
                                                -பசுமை நாயகன்