நிதின் கட்கரி மீது கெஜ்ரிவால் புகார்

  பாரதிய ஜனதா கட்சி தலைவர் நிதின் கட்கரி மகாராஷ்ட்ராவில் நீர் பாசனத் திட்டத்தில் முறைகேடு செய்ததாக அரவிந்த் கெஜ்ரிவால் புகார் கூறியுள்ளார். மேலும் நாக்பூரில் அணை கட்டுவதாகக் கூறி விவசாய நிலத்தை கையகப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பைச் சேர்ந்த அரவிந்த் கேஜ்ரிவால் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வத்ரா ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்தை டி.எல். எஃப் நிறுவனத்திடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கியதாக குற்றச்சாட்டு கூறியிருந்தார்.
தற்போது பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நிதின் கட்கரி மீது  நீர் பாசனத் திட்டத்தில் முறைகேடு செய்ததாக அவர் புகார் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு பல துறைகளில் 15 கம்பெனிகள் உள்ளன என்றும், 5 மின் உற்பத்தி ஆலைகளும், 3 சர்க்கரை ஆலைகளும் உள்ளன என்றும் தெரிவித்தார்.
தொழிற்சாலைகள் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தியதாகவும், நிலத்தை திரும்பித்தரக் கோரும் விவசாயிகளை கட்கரியின் ஆட்கள் மிரட்டுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 100 ஏக்கர் விவசாய நிலம் விதிகளுக்கு புறம்பாக கட்கரிக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்று அரவிந்த் கேஜ்ரிவால் புகார் தெரிவித்துள்ளார். மகாராஷ்ட்ர முன்னாள் துணை முதல்வர் அஜித் பவாரும் முறைகேட்டில் உடந்தையாக இருந்தார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.