நீங்கள் குடிப்பது... இயற்கை பாலா ? அல்லது செயற்கை பாலா?


நீங்கள் குடிப்பது...
இயற்கை பாலா ? அல்லது செயற்கை பாலா?

பாலின் தேவை நாடு முழுக்க அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில்... யூரியா, சலவை பொருள், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், கார சோடா, வெள்ளை பெயின்ட் என்று பலவிதமான பொருட்களும் பாலில் கலப்படம் செய்யப்பட்டு... கலப்பட மற்றும் செயற்கையான பால் தயாரிக்கப்பட்டு தராளமாக விநியோகிக்கப்படுகிறது. இத்தகைய கலப்பட பாலை பயன்படுத்துவதால், பல்வேறு வகையான நோய்களுக்கு ஆளாகி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

'டெல்லிக்கு மொத்தமாக விவசாயிகளிடம் இருந்து தினம்தோறும் சப்ளை ஆகும் பாலை விட, பல லட்சம் லிட்டர் பால் பொதுமக்களுக்கு கூடுதலாக விநியோகிக்கப்படுகிறது? இது எப்படி சாத்தியம்?' என்று சில தினங்களுக்கு முன் டெல்லியில் பாலைக் கொட்டி போராட்டம் நடத்தியபோது, பால் நிறுவனங்களை பார்த்து விவசாயிகள் எழுப்பிய கேள்வியே... பாலில் எந்த அளவுக்கு கலப்படம் நடக்கிறது என்பதற்கு சரியான சாட்சி!

கடந்த ஆண்டு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் பல்வேறு நகரங்களில் மேற்கொண்ட ஆய்வில், '68.4 சதவிகித செயற்கை பால், மனித உடலுக்கு தீங்கிழைக்கக் கூடியவையாகவே இருக்கின்றன' என்றும் எச்சரித்திருக்கிறது.

இந்நிலையில், 'கலப்பட மற்றும் செயற்கை பால் என்கிற விஷம், நாடு முழுக்க உள்ள மனிதர்களின் உடலில் மேலும் பரவாமல் உடனடியாக தடுக்க வேண்டும். இயற்கையான பால் உற்பத்தியைபெருக்க முயற்சிக்க வேண்டும். இதற்காக மத்திய-மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவிட வேண்டும்' என்று சுவாமி அச்யுதானந்த் தீரத் என்பவர் உள்ளிட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

'உரிய பதிலை வழங்க வேண்டும்' என்று மத்திய அரசுக்கும், டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள உ.பி., உத்தர்காண்ட், அரியானா, ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் நீதிபதிகள்!
                                                                           இணையதள செய்தியாளர் : சசிகுமார்